செய்திகள்
2015-ம் ஆண்டின் நிலைமை கண்டிப்பாக ஏற்படாது- அதிகாரிகள் திட்டவட்டம்
நீர்நிலைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதால் 2015-ம் ஆண்டு ஏற்பட்டது போன்ற நிலை தற்போது கண்டிப்பாக ஏற்படாது என்று அதிகாரிகள் கூறினர்.
சென்னை:
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 6 மி.மீ. அளவு மழை பெய்துள்ளது.
அதேபோல், சோழவரம் 17 மி.மீ., புழல் 15 மி.மீ., செம்பரம்பாக்கம் 5 மி.மீ. என்ற அளவில் மழை பெய்து உள்ளது. இதனால் ஏரிகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக பூண்டி ஏரியில் 4 ஆயிரத்து 308 கன அடியும், சோழவரம் ஏரிக்கு 1,076 கன அடியும், புழல் ஏரிக்கு 1,078 கன அடியும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிக்கு 70 கன அடியும் நீர் வந்து கொண்டு இருக்கிறது.
ஏரிகளின் முழு கொள்ளளவை எட்டிவிடக் கூடாது என்பதால் பாதுகாப்பு கருதியும், குடிநீர் தேவைக்காகவும் ஏரிகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதன்படி பூண்டியில் இருந்து 5 ஆயிரத்து 558 கன அடியும், சோழவரத்தில் இருந்து 1,215 கன அடியும், புழல் ஏரியில் இருந்து 2 ஆயிரத்து 169 கன அடியும், தேர்வாய் கண்டிகை ஏரியில் இருந்து 70 கன அடி, செம்பரம்பாக்கத்தில் இருந்து 2 ஆயிரத்து 151 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. திறக்கப்படும் நீர் சென்னையில் ஓடும் ஆறுகள் மூலம் கடலில் கலந்து வருகிறது.
தொடர்மழை காரணமாக சென்னையில் ஓடும் அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக நொடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் கொள்ளளவு கொண்ட அடையாறு ஆற்றில் 4 ஆயிரத்து 895 கன அடி ஓடுகிறது. இது அடையாறு முகத்துவாரம் வழியாக வங்க கடலில் கலக்கிறது. அதேபோல், நொடிக்கு 22 ஆயிரம் கன அடி நீர் கொள்ளளவு கொண்ட கூவம் ஆற்றில் ஓடும் 374 கன அடி நீர் நேப்பியர் பாலம் அருகில் வங்க கடலில் கலக்கிறது. பக்கிங்காம் கால்வாயில் ஓடும் 5 ஆயிரத்து 863 கன அடி நீர் எண்ணூர் அருகே கடலில் கலக்கிறது.
ஆறுகளில் ஓடும் மழை நீர் தங்கு தடையின்றி ஓடுவதற்காக பொக்லைன் எந்திரங்கள் மூலம் தடை இல்லாத நீரோட்டத்திற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக நேப்பியர் பாலம் அருகில் வங்க கடல் கரையில் 5 பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் மேடுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கூவம் ஆற்றில் ஓடும் மழை நீர் தங்கு தடையின்றி கடலில் கலக்கிறது. இதனால் கரைகள் சேதமடையாது. மேலும் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்துவிடாமல் தடுக்க முடியும்.
ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையால் மாநகரம் மிதந்தது போன்ற ஒரு நிலை தற்போது ஏற்பட வாய்ப்பு இல்லை.
மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படியுங்கள்... மெகா தடுப்பூசி முகாம் திட்டமிட்டபடி நடைபெறும்- அமைச்சர் பேட்டி