உள்ளூர் செய்திகள் (District)
பா.ம.க. வேட்பாளருக்கு அ.தி.மு.க. கரை போட்ட துண்டு அணிவித்த அன்பகம் திருப்பதி.

அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்த வேட்பாளர் மீண்டும் பா.ம.க.விலேயே இணைந்தார்

Published On 2022-02-16 09:45 GMT   |   Update On 2022-02-16 09:45 GMT
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்த வேட்பாளர் மீண்டும் பா.ம.க.விலேயே இணைந்துள்ளார்.
திருப்பூர்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டில் பா.ம.க. சார்பில் தண்டபாணியும், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் கவுன்சிலர் அன்பகம் திருப்பதியும் களமிறங்கி உள்ளனர்.

நேற்று காலை வார்டு பகுதியில் கட்சியினருடன் அன்பகம் திருப்பதி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த பா.ம.க. வேட்பாளர் தண்டபாணி, தான் போட்டியில் இருந்து விலகி அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு அ.தி.மு.க.கட்சி கரை போட்ட துண்டு , இரட்டை இலை சின்னம் பொறித்த பேட்ஜ் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து தண்டபாணி மாலை வரை அன்பகம் திருப்பதியுடன் சென்று பிரசாரம் செய்தார்.

இந்தநிலையில் இரவு அவர் மீண்டும் பா.ம.க. அலுவலகத்திற்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து வழக்கமான கட்சிப்பணி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சம்பவங்கள் 2 கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இது குறித்து பா.ம.க. மாவட்ட தலைவர் ரமேஷ் கூறுகையில், வார்டில் பிரசாரத்தின் போது சந்தித்து மரியாதை நிமித்தமாக அ.தி.மு.க. வேட்பாளருடன் தண்டபாணி பேசியுள்ளார். அதை அவர் கட்சியில் இணைந்து விட்டதாகவும் போட்டியில் இருந்து விலகிவிட்டார் எனவும் அ.தி.மு.க.வினர் பரப்பி விட்டனர். தோல்வி பயத்தில் அவர்கள் இது போல் செய்கின்றனர் என்றார்.

அன்பகம் திருப்பதி கூறுகையில், தண்டபாணி தன்னை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டு என்னுடன் சேர்ந்து பிரசாரம் செய்தார். பா.ம.க.வினர் மிரட்டியதால் அவர் கட்சி அலுவலகம் சென்றிருக்கலாம் என்றார்.

Similar News