உள்ளூர் செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக மீட்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

Published On 2022-04-12 05:02 GMT   |   Update On 2022-04-12 05:02 GMT
தமிழக மீனவர்களை மத்திய அரசு உதவியுடன் விரைவில் மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு.

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மீன்பிடித் தொழில் என்பது மீனவமக்களின் வாழ்வாதாரம். இந்தத் தொழிலில் வரும் சொற்ப வருமானத்தை வைத்துத்தான் மீனவர்கள் குடும்பம் நடத்துகிறார்கள். இலங்கைக் கடற்படையினரின் தொடர் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும், சிறை பிடித்தலுக்கும் இடையே மீன்பிடித் தொழிலை தமிழக மீனவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்களுடைய வறுமை தானே தவிர வேறு ஒன்றுமில்லை.

இப்படிப்பட்ட மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம் ஒரு கோடி ரூபாய் கேட்பது என்பது அநியாயத்தின் உச்சகட்டம். இந்த அளவுக்கு பிணைக் கட்டணம் செலுத்தக்கூடிய சக்தி மீனவர்களிடம் இருந்திருந்தால், அவர்கள் இந்தத் தொழிலையே மேற்கொள்ளமாட்டார்கள். ஒரு கோடி ரூபாய் பிணைக் கட்டணத்தை தமிழக மீனவர்களால் செலுத்தவே இயலாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

ஒருவேளை இலங்கை நாட்டில் உள்ள தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக இந்த அளவுக்கு பிணைத் தொகை செலுத்த வேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கலாம். அதேசமயத்தில், அந்தத் தொகையை செலுத்தக்கூடிய சக்தி மீனவர்களுக்கு இருக்கிறதா என்பதையும் நீதிமன்றம் ஆராய வேண்டும். இலங்கை நாடு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்றால், அதற்குத் தேவையான நிதி உதவியைபிற நாடுகளிடமிருந்து ராஜதந்திர முறையில் கேட்டுப் பெற வேண்டும். அதைவிடுத்து, இது போன்று அநியாயமாக ஏழை மீனவமக்கள் மீது தண்டம் விதிப்பது ஏற்கத்தக்கதல்ல. இதை ஏழை மீனவர்களால் செலுத்தவும் முடியாது.

இலங்கைக்கு பல உதவிகளை செய்து கொண்டிருக்கும் நாடு இந்தியா. இப்படிப்பட்ட உதவி செய்கின்ற நட்பு நாடான இந்திய நாட்டு மீனவர்களிடம் ஒரு கோடி ரூபாய் கட்டணம் செலுத்தச் சொல்வதும், அவர்களைத் துன்புறுத்துவதும், சிறைபிடிப்பதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்து ஏலத்தில் விடுவதும் செய்நன்றி மறத்தலாகும்.

தமிழக மீனவர்களை மத்திய அரசு உதவியுடன் விரைவில் மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, இலங்கை நாட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வரவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உதவியுடன் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... தமிழகத்தில் வரும் 16-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

Tags:    

Similar News