உள்ளூர் செய்திகள் (District)
கோப்புப்படம்.

கவுசிகா நதிக்கரையில் கோழிக்கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை

Published On 2022-05-08 07:54 GMT   |   Update On 2022-05-08 07:54 GMT
வரும், திங்கட்கிழமை தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுவிடும்.
அவிநாசி:

அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் ஜெகதீசன் தலைமையில்  நடந்தது. துணைத்தலைவர் பிரசாத்குமார் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் மனோகரன், விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், நடந்த விவாதம் வருமாறு:-

சேதுமாதவன் (தி.மு.க.,):இல்லம் தேடி கல்வி திட்டத்தில், தன்னார்வலர்களுக்கு வழங்கப்படும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை முறையாக வழங்கப்படுவதில்லை. பெரியாயிபாளையம், குளத்துப்பாளையம், தேவம்பாளையம் மயானங்களுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.எனது வார்டில் உள்ள ரேஷன் கடைகளில், பருப்பு, பாமாயில் போன்றவை மாத இறுதியில் மட்டுமே வழங்கப்படுவதால், பலரும் வாங்க முடிவதில்லை.

மகேஸ்வரி (வட்டார கல்வி அலுவலர்): இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள், அவரது வங்கி கணக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் சிலருக்கு ஊக்கத்தொகை செல்லாமல் இருந்திருக்கும். இப்பிரச்னை சரி செய்யப்படும்.

கார்த்திகேயன் (திமு.க.,): அவிநாசி புதிய பஸ் நிலையம்,வாரச்சந்தை ரோடு படுமோசமாக இருப்பதால், அடிக்கடி விபத்து நேரிடுகிறது. சீரமைக்க நிர்வாக ஒப்புதல் கிடைக்கவில்லை என நெடுஞ்சாலைத் துறையினர் கூறி வருகின்றனர்.

முத்துசாமி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு): வஞ்சிபாளையம், கவுசிகா நதிக்கரையில் கோழி உள்ளிட்ட இறைச்சிக்கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஊராட்சி பள்ளிகளில் பணிபுரியும்  தூய்மை பணியாளர்களுக்கு மாதம், 2,250 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. அதுவும், உரிய தேதியில் வழங்கப்படுவதில்லை.அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கிய பிறகு தான் பி.டி.ஓ.,வுக்கு சம்பளம் வழங்க வேண்டும். 

சுரேஷ் குமார் (மேலாளர்): வரும், திங்கட்கிழமை  தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுவிடும்.அய்யாவு (அ.தி.மு.க.,): பிச்சாண்டம்பாளையம் ஏ.டி., காலனியில், கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும். துலுக்கமுத்தூர் பகுதியில் அதிக அளவு மான், மயில் தொல்லை உள்ளது.

ஜெகதீசன் (தலைவர்): வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு நடந்த விவாதங்களை தொடர்ந்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News