உள்ளூர் செய்திகள் (District)
கோப்புபடம்.

திருப்பூர் மாவட்டத்தில் கியூ பிரிவு போலீஸ் விரைவில்- தொடக்கம்

Published On 2022-05-12 06:53 GMT   |   Update On 2022-05-12 06:53 GMT
இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் விரைவில் திருப்பூர் மாவட்ட கியூ பிரிவு வர உள்ளது.
திருப்பூர்:

கோவை, ஈரோடு மாவட்டத்தில் இருந்த திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை, காங்கயம், தாராபுரம் ஆகிய பகுதிகளை பிரித்து கடந்த 2009-ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் உதயமானது. மாவட்டம் உதயமாகி 13 ஆண்டுகளாகியும் போலீஸ் துறையில் உள்ள கியூ பிரிவு போன்ற சில பிரிவுகள் உருவாக்கப்படாமல் இருந்து வந்தது. 

இதன் காரணமாக திருப்பூர் மாநகரம்அவிநாசி, பல்லடம், உடுமலை ஆகிய பகுதி கோவை மாவட்ட கியூ பிரிவிலும், காங்கயம், தாராபுரம், குன்னத்தூர் பகுதிகள் ஈரோடு மாவட்ட கியூ பிரிவில் செயல்பட்டு வந்தது.

வேலைப்பளு, போலீஸ் பற்றாக்குறை போன்ற காரணங்களால் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்க போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது. 

எனவே இப்பிரிவை உருவாக்க நீண்ட காலமாக போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. இச்சூழலில் இப்பகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் மாவட்ட கியூ பிரிவு ரூ.1.44 கோடி செலவில் உருவாக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இதன் காரணமாக இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் விரைவில் திருப்பூர் மாவட்ட கியூ பிரிவு வர உள்ளது. ஆனாலும்தொழிலாளர்கள் நிறைந்த மாநகரம் என்பதால் கோவையை போன்று திருப்பூர் மாநகருக்கு தனியாக இப்பிரிவு உருவாக்க வேண்டும்.

அதேபோல் மாநகரில் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை (எஸ்.பி.சி.ஐ.டி.,) மற்றும் மாநகர போலீஸ் கமிஷனரகத்தில் கமிஷனரின் வேலைப்பளுவை குறைக்கவும், களப்பணியில் முழு கவனம் செலுத்த வழி வகுக்கும் வகையில் போலீஸ் துணை கமிஷனர் (தலைமையிடம்) பதவி உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பு திருப்பூர் மாவட்ட, மாநகர போலீசார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News