கோவை மாநகரில் ரூ.210 கோடி வரி வசூல்
- மாநகராட்சி அதிகாரிகள் தகவல் அளித்தனர்.
- ரூ.373 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கோவை,
கோவை மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, மத்தியம், வடக்கு, தெற்கு என 5 மண்டலங்கள் உள்ளன.
5 மண்டல எல்லைக்குள் சொத்து வரி செலுத்துபவர்கள் சுமார் 4 லட்சத்து 75 ஆயிரம் பேர் உள்ளனர். கடந்த 2021-22-ம் நிதியாண்டில் மாநகராட்சி சார்பில் ரூ.150 கோடி நிலுவை தொகை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் ரூ.27 கோடி வசூலிக்கப்பட்டது.
அதேபோல் நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் மொத்தம் ரூ.373 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, சொத்துவரி வசூலை தீவிரப்படுத்தியது மாநகராட்சி நிர்வாகம். இதன் காரணமாக தற்போது வரை ரூ.182 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று 73-வது வார்டு, பொன்னையராஜபுரம் வார்டு அலுவலகம், 40-வது வார்டில் பெரியதோட்டம் பகுதியில் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற்றது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
நடப்பு நிதியாண்டு மற்றும் கடந்த நிதியாண்டின் நிலுவை தொகை என மொத்தம் ரூ.524 கோடி சொத்து வரி வசூல் செய்ய வேண்டியுள்ளது. இதில் ரூ.210 கோடி வரை வரி வசூல் செய்யபட்டுள்ளது.
இதில் நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ.373 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வசூல் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
சொத்து வரி தொகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வசூல்பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நீண்ட நாட்களாக சொத்துவரியை நிலுவை வைத்துள்ளவர்களின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரியினங்களையும் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தவிர்த்து, மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், மாா்ச் 31-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம் போல காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.