கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சி மன்ற தலைவர்களின் அவசர கூட்டம்
- கூட்டத்தில் தென்காசி மாவட்ட கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
- கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வருகிற 25-ந்தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கடையம்:
கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சி மன்ற தலைவர்களின் அவசர கூட்டம் திருமலையப்பபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் மாரியப்பன் தலைமையில், கூட்டமைப்பு செயலாளர் பூமிநாத் முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தென்காசி மாவட்ட கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஒற்றைத் தீர்மானமாக 23 ஊராட்சி மன்ற தலைவர்களும் ஒருங்கிணைந்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறுகின்ற ஏ.ஜி.எம்.டி. வேலைகள் ஊராட்சி மன்ற தலைவர்களின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும், அதில் பிறர் தலையிட அனுமதிக்க மாட்டோம். இக்கோரிக்கையை 20 மாத காலமாக வலியுறுத்தி வருகிறோம். இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்-அமைச்சரிடம் பலமுறை எடுத்துரைத்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை.
ஆகவே வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலையில், கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் செண்பகவல்லி ஜெகநாதன், அழகுதுரை, முகைதீன் பீவி அசன், பிரேமராதா ஜெயம், ரவிச்சந்திரன், மாரி சுப்பு, முருகன், முகமது உசேன், பொன் ஷீலாபரமசிவன், முத்துலட்சுமி ராமதுரை, கல்யாணசுந்தரம், ஜீனத் பர்வீன் யாகூப், கணேசன், மதியழகன், முத்தமிழ் செல்வி ரஞ்சித், குயிலி லட்சுமணன், ஜன்னத் சதாம், மலர்மதி சங்கரபாண்டியன், சாருகலா ரவி, முப்புடாதி பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.