உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்கள் 3,312 பேர் பணியிட மாற்றம்

Published On 2023-06-06 06:56 GMT   |   Update On 2023-06-06 06:56 GMT
  • தொடக்கக்கல்வி துறையின் கீழ் 3,312 ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர்.
  • அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 8 -ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரிய வழக்கில் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை ஏற்று பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து மாறுதல் கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு கடந்த மே 15-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடத்தப்பட்டது. இதன்மூலம் தொடக்கக்கல்வி துறையின் கீழ் 424 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1,111 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1,777 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 3,312 பேர் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர்.

இந்த மாறுதலால் அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்து கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News