உள்ளூர் செய்திகள் (District)

சேலம் மாநகரில் மாதந்தோறும் 500 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

Published On 2022-12-14 09:52 GMT   |   Update On 2022-12-14 09:52 GMT
  • சேலம் மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • இந்த தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து கருத்தடை செய்து வருகின்றனர்.

அன்னதானப்பட்டி:

சேலம் மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து கருத்தடை செய்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் தலா ஒரு வாகனம் மூலம் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை மையத்திற்கு கொண்டு சென்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

சேலம் பொன்னம்மாப்பேட்டை அடுத்த வாய்க்கால்பட்டறை பகுதியில் மாநகராட்சி தெரு நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் உள்ளது.

இங்கு தினமும் 50 முதல் 60 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இதனை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று, பாதுகாப்பாக தெரு நாய்களை பிடிக்கும் பணியாளர்களுக்கு, சேலம் மாநகராட்சி புளுகிராஸ் அமைப்புடன் இணைந்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து தெரு நாய்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அவற்றைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. மேலும் கருத்தடை அறுவை சிகிச்சையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், " மாநகர பகுதிகளில் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, சுற்றித் திரியும் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. வாய்க்கால்பட்டறையில் செயல்பட்டு வரும் தெரு நாய்கள் அறுவை சிகிச்சை மையத்தில், மாதந்தோறும் 450 முதல் 500 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்திலேயே அவை விடப்பட்டு வருகின்றன.

இந்த மாதத்தில் இது வரை 150-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தற்போது குளிர்காலம் என்பதால் நாய்கள் அதிகளவில் இனச்சேர்க்கையில் ஈடுபடும். எனவே தொடர்ந்து நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை சிகிச்சை செய்து, அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." என்று கூறினர்.

Tags:    

Similar News