சிதம்பரம் பகுதியில் தகுதி சான்று பெறாத 6 ஆட்டோக்கள் சிறைபிடிப்பு: மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி
- மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா அதிரடி சோதனை மேற்கொண்டார்.
- குழந்தைகளை ஏற்றி செல்லும் பொழுது அவைகளையும் நாங்களே கண்காணிக்க வேண்டி உள்ளது.
கடலூர்:
சிதம்பரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாசலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா அதிரடி சோதனை மேற்கொண்டார். சிதம்பரம் பகுதியில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு தகுதிச் சான்று பெறாமல் சென்ற வாகனங்கள் நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. அப்போது பல வாகனங்களில் ஓட்டுநர் உரிமம், காப்புச் சான்று ஆகியவையும் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டது. ஒரே நாளில் பள்ளி குழந்தைகள் ஏற்றிச் செல்லும் 6 ஆட்டோக்கள் சிறைபிடிக்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா கூறியதாவது:-
ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் குழந்தைகளை ஏற்றி செல்லும் பொழுது அவைகளையும் நாங்களே கண்காணிக்க வேண்டி உள்ளது. எந்த பள்ளி நிர்வாகமும் இந்த வாகனங்களை குறித்து கவலைப்படுவதில்லை. அதே போல பெற்றோர்களும் வாகனத்தின் தரம் குறித்து கவலைப்படுவதில்லை . இந்த விஷயத்தில் பெற்றோர் பள்ளி நிர்வாகம் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது. தகுதி சான்று வழங்கிய வாகனங்களின் இடது புறத்தில் அந்த வாகனத்தின் அனைத்து விபரங்களும் அச்சிடப்பட்டிருக்கும். பெற்றோர்கள் அதனைப் பார்த்து வாகனத்தின் தரம் குறித்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். மேலும் தகுதி சான்று இல்லாமல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்லும் எந்த வாகனமாக இருந்தாலும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முறையாக இல்லாமல் இருந்தால் வாகனம் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.