உள்ளூர் செய்திகள்

உணவை ருசிபார்த்த கரடி-பொதுமக்கள் அச்சம்

Published On 2024-07-30 05:10 GMT   |   Update On 2024-07-30 05:10 GMT
  • கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
  • வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அருவங்காடு:

குன்னூர் பகுதியில் கிராமப்புறம் மட்டுமின்றி நகர பகுதிகளிலும் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஊருக்குள் சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை முயற்சி மேற்கொண்டாலும், அவை எளிதில் தப்பித்து மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடுகின்றன.

இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றைக்கரடி குன்னூர் ஆர்செடின் பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள சின்னப்பன் என்பவரது வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்றது.

தொடர்ந்து சமையலறையில் இருந்த உணவுகளை தின்று ருசிபார்த்தது. பின்னர் அங்கிருந்த சமையல் பொருட்களை சூறையாடியது.

இதற்கிடையே வீட்டில் பொருட்கள் உருளும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த சின்னப்பன் உடனடியாக சமையலறைக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு கரடி நின்றுகொண்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னப்பன் குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து அண்டை வீட்டாரிடம் நடந்த விஷயங்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று வீட்டுக்குள் நின்ற கரடியை தீப்பந்தங்கள் காட்டி அருகிலுள்ள தேயிலை தோட்டத்துக்கு விரட்டியடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த குன்னூர் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் கரடியின் நடமாட்டம் தீவிரமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News