உள்ளூர் செய்திகள்

புதர் மண்டி கிடக்கும் கால்வாய்.

களக்காடு அருகே புதர் மண்டி கிடக்கும் கால்வாய்

Published On 2022-07-23 09:53 GMT   |   Update On 2022-07-23 09:53 GMT
  • கால்வாயின் கரையில் குப்பைகளும் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.
  • கால்வாயில் செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள இறையடிக்கால் கிராமம் வழியாக இறையடிக்கால்வாய் செல்கிறது. அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு இந்த கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இறையடிக் கால்வாய் நீண்ட நாட்களாக தூர் வாரப்படாமல் இருக்கிறது.

இதையடுத்து கால்வாயில் செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. கால்வாயே தெரியாதவாறு செடிகள் முளைத்து, காடு போல் காட்சி அளிக்கிறது. மேலும் மண் திட்டுகளும் ஏற்பட்டுள்ளன.

மண் திட்டுகளால் கால்வாயில் நீரோட்டம் தடை பட்டுள்ளது. இதனால் குளங்களுக்கு தண்ணீர் செல்லாமல் தடை ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் மழைக்காலங்களில் கால்வாயில் அதிகளவில் வெள்ளம் வரும் போது, அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கரைகளை உடைத்து கிராமங்களுக்குள் புகும் அபாயகரமான சூழல் நிலவுகிறது. கால்வாயில் அடர்ந்துள்ள புதர்களில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் தஞ்சமடைந்துள்ளன.

இவைகள் கால்வாய் கரையோரமுள்ள குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். கால்வாயின் கரையில் குப்பைகளும் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.

எனவே புதர் மண்டி கிடக்கும் இறையடிக்கால்வாயை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News