உள்ளூர் செய்திகள்

கடலூர் நீதிமன்றத்தில் போலீசார் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

மீனவர்கள் கிராமத்திற்குள் ஏற்பட்ட மோதல் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு ஒத்திவைப்பு கடலூரில் போலீசார் குவிப்பு

Published On 2023-03-04 09:58 GMT   |   Update On 2023-03-04 09:58 GMT
  • கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனங்குப்பம் மீனவர்களுக்கு முன் விரோத தகராறு இருந்து வந்தது.
  • பஞ்சநாதனை பயங்கர ஆயுதங்களை கொண்டு குத்தியதில் பஞ்சநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்3 மீனவர்கள் காயமடைந்தனர்.

கடலூர்:

கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனங்குப்பம் மீனவர்களுக்கு முன் விரோத தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2018 -ம் ஆண்டு மே மாதம் 15 -ந் தேதி இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டு கடலில் தாக்கிக் கொண்டனர். இதனை தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சோனங்குப்பம் மீனவ கிராமத்திற்கு கடல் வழியாக சென்றனர். அப்போது சோனங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க.பிரமுகர் பஞ்சநாதன் தேவனாம்பட்டினம் மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட சென்றார். இதில் ஆக்ரோஷமாக வந்த தேவனாம்பட்டினம் சேர்ந்த மீனவர்கள் பட்டப் பகலில் பஞ்சநாதனை பயங்கர ஆயுதங்களை கொண்டு குத்தியதில் பஞ்சநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்3 மீனவர்கள் காயமடைந்தனர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்

. மேலும் இந்த வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட தினகரன் வழக்கு விசாரணையில் இருந்தபோது இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 16- ந்தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது மார்ச் 4 -ந் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.  அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் நீதிமன்ற வளாகம், தேவனாம்பட்டினம், சோனாங் குப்பம் மற்றும் கடற்கரை பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் இதனை தொடர்ந்து இன்று காலை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபா அன்புமணி வருகிற 8 -ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் ஆங்காங்கே ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இது மட்டும் இன்றி அந்த பகுதிகளில் காரணமின்றி பொதுமக்கள் கூடாத வகையில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதல் கடலூர் மாவட்டம் முழுவதும் இந்த வழக்கு தொடர்பாக பெரும் பரபரப்பாக காணப்பட்டு வந்த நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்ட காரணத்தினால் பரபரப்பு அடங்கி அமைதி யான நிலை தொடர்ந்தது. 

Tags:    

Similar News