வேளாண்மை துறை சார்பில் ஆடுதுறையில், சம்பா விதை நெல் உற்பத்தி குறித்து ஆய்வு
- நெல் ரகங்களுக்கு தேவையான வல்லுநர் விதை கருவிதையிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
- வயலாய்வு மேற்கொண்டு வயல் தரத்தை உறுதி செய்து தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர்.
திருப்பனந்தாள்:
ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளால் விரும்பி விளைவிக்கப்படும் நெல் ரகங்களுக்கு தேவையான வல்லுநர் விதை கருவிதையிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
நடப்பு சம்பா பருவத்தில் சி.ஆர்.1009 (சாவித்திரி) ஏ.டி.டீ.-51 மற்றும் ஏ.டி.டீ.-52 ஆகிய நீண்டகால ரங்கள் பயிரிடப்பட்டுள்ளன.
இவற்றை பூக்கும் பருவத்தில் விதைச்சான்றுத் துறையினர் முதலாம் வயலாய்வு மேற்கொண்டு வயலில் தென்பட்ட ஒருசில கலவன்களை நீக்கி வயல் தரம் பேணிவந்த நிலையில் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் முகமது பாருக் தலைமையில் விதைச்சான்று அலுவலர்கள் செல்வமணி, ஜெகதீஸ்வர், பிரபு, மற்றும் அரவிந்த் ஆகியோர் ஆராய்ச்சி நிலையத்தின் மரபியல் துறை வல்லுநர்களுடன் இணைந்து 2 ஆம் வயலாய்வு மேற்கொண்டு வயல் தரத்தை உறுதி செய்து தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர்.
இவைரக வாரியாக முறையாக அறுவடை செய்யப்பட்டு உலர்த்தி, சுத்திப்பணிகள் செய்து, பகுப்பாய்வில் தேர்ச்சி பெற்ற பிறகு பொன்னிற மஞ்சள் சான்று அட்டை பொருத்தி வல்லுநர் விதையாக விற்பனை செய்யப்படும்.
இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட வல்லுநர் விதைகளை கொண்டு அடுத்த ஆண்டு சம்பா பருவத்தில் தமிழ்நாடு அரசின் மாநில அரசு விதைப்பண்ணைகளில் ஆதாரநிலை விதைகளாக உற்பத்தி செய்து விதைகளை பெருக்கி வெள்ளைநிற சான்றட்டை பொருத்தி அதற்கு அடுத்த ஆண்டு விவசாயிகளின் வயல்களில் சான்றுநிலை விதைகளாக உற்பத்தி செய்து நீலநிற சான்று அட்டை பொருத்தி பின்வரும் ஆண்டில் விவசாயிகளுக்கு சான்றுபெற்ற விதைகளாக அளிக்கப்படுகிறது.
அரசின் வேளாண்மை விரிவாக்க மையங்களில் மான்ய விலையில் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.