வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு; 5 பேர் கைது
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர் .
- 5 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் சம்பவத்தன்று இரவில் சென்னையை சேர்ந்த வாலிபர் அபினேஷ் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 5 பேர் கத்தியை காட்டி மிரட்டி அபினேசை தாக்கி செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இது குறித்து அவர் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .
தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் சம்பந்தம், முருகேசன், தலைமை காவலர்கள் சிவகுமார், மார்ட்டின், கோபி ஆகியோர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் தஞ்சைக்கு 2 மோட்டார் சைக்கிளில் செல்போனை விற்க வந்த 5 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர்.
அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.
சந்தேகமடைந்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் அவர்கள் தஞ்சை பூக்காரத் தெருவை சேர்ந்த கட்டை ஸ்ரீதர் என்ற ஸ்ரீதர் (வயது 22), கலைஞர் நகரை சேர்ந்த அஜித் (22), பாலமுருகன் (26), வெங்கடேச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஹரிஷ் (22), தில்லை நகரை சேர்ந்த வெங்கடேஷ் (23) என்பதும், அபினேசை தாக்கி செல்போன் பறித்ததும், அந்த செல்போனை திருட்டுத்தனமாக விற்க முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.