திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூரம் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
- 10 நாட்களுக்கு அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் உற்சவ விழாக்கள் நடக்கிறது
- ஆகஸ்ட் 1-ந்தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு காவிரியில் தீர்த்தவாரியும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகளும் நடக்கிறது.
திருவையாறு:
தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு அறம்வளர்த்தநாயகி அம்மன் உடனாய ஐயாறப்பர் கோயில் அம்மன் சன்னதியில் ஆடிப்பூரம் உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.
முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து, கொடி திருவையாறின் கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி மற்றும் வடக்கு வீதி ஆகிய நான்கு ராஜவீதிகளில் மங்கள வாத்திய இசையுடன் முன்னே யானை ராஜநடையுடன் பவனி வந்து அம்மன் கோயிலை அடைந்தது.
பின்னர், வேதபாராயனம், தேவாரம் மற்றும் திருவாசகம் பாடி, கொடி மர பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது. இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் உற்சவ விழாக்கள் நடக்கிறது. இன்றிரவு வெள்ளிப்படிச் சட்டத்தில் அம்பாள் வீதி உலாவும், நாளை முதல் தினமும் காலையில் பல்லக்கிலும் இரவில் சேஷ வாகனம், காமதேனு, வெள்ளி ரிஷபம், அன்னம், சிம்மம் மற்றும் குதிரை ஆகிய வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி இரவு வீதி உலா நடக்கிறது.
28- ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு அன்றிரவு தருமையாதீன 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாள் சுவாமிகளின் அருளாசியுடன் ஐயாறப்பர் கோயில் சூரிய புஷ்கரணி பிரகாரத்தில் அப்பர் கயிலைக் காட்சி விழா நடக்கிறது. 31-ந்தேதி காலையில் அம்பாள் தேர்பவனி நடக்கிறது. மறுநாள் ஆகஸ்ட் 1-ந்தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு காவிரியில் தீர்த்தவாரியும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகளும் நடக்கிறது.
அன்றிரவு இயல், இசை, நாடகம், தேவாரம், திருவாசகம் திருமுறைப் பாடல்கள் மற்றும் கயிலை வாத்திய இசை முழக்குகளுடன் அம்மன் கோயில் பிரகாரத்தை பக்தர்கள் ஏழுமுறை வலம் வரும் சப்த பிரதச்சனம் நடக்கிறது. ஆடிப்பூர விழா நாட்களில் மாலையில் அம்மன் கோயில் கொலு மண்டபத்தில் தமிழ்ச் சான்றோர்களின் ஆடிப்பூர அம்மன் பற்றிய ஆன்மீகச் சொற்பொழிவுகளும், இன்னிசை, பாடல் மற்றும் நாட்டியக் கலைநிக ழ்ச்சிகளும் நடக்கிறது.
2-ந்தேதி பிராயச் சித்த அபிஷேகத்துடன் ஆடிப்பூரம் உற்சவம் நிறைவடைகிறது. இவ்விழா விற்கான ஏற்பாடுகளை தருமையாதீன 27-வது சந்நிதானத்தின் அருளாணைப்படி திருவையாறு ஐயாறப்பர் கோயில் நிர்வாகத்தினர் செய்திருக்கிறார்கள்.