அரசு பள்ளி மாணவி சதுரங்க போட்டியில் சாதனை
- மாவட்ட மற்றும் மாநில அளவில் 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன்.
- மிகப்பெரிய அளவில் சதுரங்க போட்டியில் சாதனை படைப்பேன்.
நாகப்பட்டினம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த மகிழஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் விவசாய கூலி தொழிலாளி பக்கிரிசாமி- புவனேஸ்வரி தம்பதியின் மகள் மகிஷா. இவர் மகிழஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது பள்ளி ஆசிரியர் ஈஸ்வரன் துணையுடன் மாநில அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார்.
இதுகுறித்து மாணவி கூறியதாவது:-
வறுமையான குடும்பத்தில் பிறந்து, இடிந்துள்ள வீட்டில் வசிக்கும் நான் பள்ளி ஆசிரியர் உதவியுடனும், எனது 67 வயது பாட்டி பத்மாவதி துணையுடன் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். என் குடும்ப சூழ்நிலையால் என்னால் முறையாக பயிற்சி எடுக்கவும், அதற்கான சாதனங்களை வாங்குவதற்கும் முடியவில்லை. எனவே, கருணை மனம் கொண்டவர்களும், தமிழக அரசும் எனக்கு உறுதுணையாக ஆதரவளித்தால் மிகப்பெரிய அளவில் சதுரங்க போட்டியில் சாதனை படைப்பேன் என கண்ணீர் மல்க கூறினார்.