அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்தாலும் ஒரு பலனும் கிடைக்காது: கே.எஸ்.அழகிரி
- பா.ஜ.க. தனக்கு சம்பந்தம் இல்லாத உரிமைகளை கோருகிறது.
- அ.தி.மு.க. என்பது மோடியின் மறு உருவம்.
சென்னை :
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இலக்கிய அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் அணியின் தலைவர் பி.எஸ்.புத்தன் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசினார்.
இதில் மாநில துணைத்தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, பலராமன், கோபண்ணா, பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, காண்டீபன், பி.எஸ்.தமிழ்செல்வன், மாநில செயலாளர் அகரம் கோபி, மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. தனக்கு சம்பந்தம் இல்லாத உரிமைகளை கோருகிறது. காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு 2 ஆயிரம் மாணவர்கள் செல்வதற்கான செலவை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, இதில் உரிமை கொண்டாட வேண்டும் என்றால் இந்து அறநிலையத்துறைதான் உரிமை கொண்டாட வேண்டும்.
பிரதமர் மோடி வேண்டுமானால் நிகழ்ச்சிக்கு வரலாம். ஆனால் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தது தமிழக அரசுதான்.
மகாத்மா காந்தி நாட்டு மக்களிடம் உண்மையை பேசினார், நேர்மையை பேசினார், மக்களை தன்பால் கவர்ந்தார் என்பதற்காக சுட்டுக்கொல்லப்பட்டார். ராகுல்காந்தியும் அதே பாதையில் பயணிக்கிறார், அதே பாதையில் செயல்படுகிறார். ராகுல்காந்தி நடந்து செல்வதன் மூலம் அவர்கள் மிரண்டு போய் உள்ளனர். எனவே, ராகுல்காந்திக்கு மிரட்டல் விடுக்கிறார்கள்.
தமிழகத்தில் எங்களின் கூட்டணி என்பது கொள்கை ரீதியானது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினரின் சித்தாந்தம், மதவெறி தாக்குதல்களை தடுப்பது என்ற ஒற்றை நேர்க்கோட்டில்தான் நாங்கள் சேர்ந்து இருக்கிறோம். இந்த கொள்கையை அ.தி.மு.க.வினால் ஒருபோதும் கடைபிடிக்க முடியாது. அ.தி.மு.க. என்பது மோடியின் மறு உருவம். அதனால்தான், அந்த கட்சி பலவீனப்பட்டு கிடக்கிறது.
அ.தி.மு.க. மெகா கூட்டணி, அதைவிட மகா மகா கூட்டணி அமைத்தாலும் அதற்கு ஒரு பயனும் கிடைக்காது. ஏனென்றால் அதை இயக்குபவர்கள் மோடியும், அமித்ஷாவும்தான். அவர்களை (அ.தி.மு.க.வினரை) அவர்களே இயக்க எப்போது ஆரம்பிக்கிறார்களோ அப்போதுதான் தமிழக மக்கள் அவர்களை திரும்பிப்பார்ப்பார்கள். இன்னொருவரின் இயக்கத்தில் அவர்கள் நடித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால் தமிழகத்தில் பழைய வலிமையை பெற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.