உள்ளூர் செய்திகள்

1 மாதத்துக்கு பின்னர் வீராணம் ஏரிக்கு வந்த காவிரி தண்ணீர்

Published On 2022-06-25 10:19 GMT   |   Update On 2022-06-25 10:19 GMT
1 மாதத்துக்கு பின்னர் வீராணம் ஏரிக்கு காவிரி தண்ணீர் வந்தது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாயநிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த ஏரிக்கு பருவ காலங்களில் பெய்யும் மழை மற்றும் மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். வழக்கமாக மேட்டூர் அணை தண்ணீர் ஜூன் 12-ந் தேதிதான் திறந்து விடப்படும். ஆனால் இந்த ஆண்டு கடந்த மாதம் 24-ந் தேதியே திறந்துவிடப்பட்டது.

மேட்டூர் அணை தண்ணீர் காவிரி ஆற்றில் கலந்து அங்கிருந்து கொள்ளிடம் வழியாக அணைக்கரை வருகிறது. அங்கிருந்து கீழலணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும்.இந்த தண்ணீர் நேற்று மாலை வீராணம் ஏரிக்கு வந்து சேர்ந்தது. இதனை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 41.70 அடியாக இருந்தது. ஏரிக்கு வடவாறு வழியாக 625 கனநீர் வந்தது. சென்னை மாநகர் குடிநீருக்காக 58 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து இதேபோன்று நீர்வரத்து இருந்தால் விரைவில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News