உள்ளூர் செய்திகள்

ஆலாந்துறை காமாட்சி அம்மன் கோவில் திருவிழா

Published On 2023-05-04 09:15 GMT   |   Update On 2023-05-04 09:15 GMT
  • 96-ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
  • பக்தர்கள் பறவை அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வடவள்ளி,

கோவை சிறுவாணி சாலை ஆலந்துறையில் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் உள்ளது. 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தினரின் கோவிலான இக்கோவிலில் 96-ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தத் திருவிழாவை வான வேடிக்கைகளுடன், மேளதாளங்கள் முழங்க பிரம்மாண்டமாக கொண்டாடினர்.

இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கோவில் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

நேற்று கோமாரி பூஜை செய்யப்பட்டு இரவு சத்தி கிரகம் எடுத்து அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான இன்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலையில் 501 பக்தர்கள் பூவோடு எடுத்தனர். மேலும் பறவை வாகனத்தில் அலகு குத்துதல், ஆணி கால் செருப்பு, பால்குடங்கள் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சிலர் காந்தாரா போன்ற காவல் தெய்வங்களின் அலங்காரத்துடன் ஊர்வலம் மேற்கொண்டனர். தொடர்ந்து வண்ணமிகு வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். நாளை மாவிளக்கு வழிபாடு, முளைப்பாரி வழிபாடு ஆகியவை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது.

Tags:    

Similar News