உள்ளூர் செய்திகள் (District)

பனை மற்றும் தென்னை கள் விற்பனையை அனுமதிக்க வேண்டும்-கலெக்டரிடம் இந்து மக்கள் கட்சி மனு

Published On 2023-05-29 10:17 GMT   |   Update On 2023-05-29 10:17 GMT
  • கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
  • கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்து விட்டனர்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

கோவை மாவட்ட மொத்த அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை நடத்தி வருகிறோம். இதன் மூலம் வியாபாரிகள் அவரது குடும்பத்தினர், கூலி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமும் அடங்கி உள்ளது.

இந்நிலையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணா மார்க்கெட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது. எனவே சீரமைப்பு பணிகள் முடியும் வரை கோவை கவுண்டம்பாளையம் எருக்கம்பெணி மைதானத்தில் தற்காலிகமாக எங்களது செலவில் கடைகளை அமைத்து வியாபாரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியில் மின்சாரம், குடிநீர் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. எனவே இந்த விவாகரத்தில் கலெக்டர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகம் செய்து கொண்டே மார்க்கெட்டை சீரமைக்க வழிவகை ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் சமீபத்தில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகளவில் சட்ட விரோதமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்து விட்டனர்.

தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளிலும் போலி மதுபான விற்பனைகள் நடைபெற்று வருகிறது. போலி மதுபானம் தயாரிக்கும் ஆலைகள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க அரசின் தேர்தல் வாக்குறுதியில் பிரதான கோரிக்கையான பூரண மதுவிலக்கை அமல்படுத்திடவும், கள்ளச்சாராயம் விற்பவர்களைகுண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவும், தமிழக விவசாயிகளின் நலம் காத்திடும் வகையில் பனை மற்றும் தென்னை கள் விற்பனையை அனுமதி அளிக்க வேண்டும்.மேலும் தமிழக அரசு பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் வரை டாஸ்மாக் கடைகளை கள்ளு கடைகளாக மாற்றி பனை மற்றும் தென்னை விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி அளித்தும், அதை தமிழகஅரசே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்திட வேண்டும். இதனால் விவசாயிகள் அதிக அளவில் பயனடைவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

கோவை அருகே உள்ள ஊத்துப்பாளையம் பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில், கோவை மாவட்ட ம் சூலூர் வட்டம் அரசூர் ஊராட்சிக்குட்பட்ட ஊத்துப்பாளையம் பகுதியில் உள்ள நீர்நிலையில் உள்ள குட்டை மற்றும் வாய்க்கால் பகுதியில் தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் நீர் நிலைக்கு வரும் தண்ணீர் தடைபடும். எனவே நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News