தி.மு.க அரசின் வாக்குறுதிகளை பரந்தூர் விவசாயிகள் நம்பத் தயாராக இல்லை - அண்ணாமலை
- பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
- தி.மு.க. அரசின் வாக்குறுதிகளை பரந்தூர் விவசாயிகள் நம்ப தயாராக இல்லை என்றார் அண்ணாமலை.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி.மு.க. ஆட்சியின் கடந்த ஓர் ஆண்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மாற்று குடியிருப்புகள் கொடுப்பதற்கு முன்பு வீடுகள் இடிக்கப்பட்டதை பரந்தூர்வாசிகள் பார்த்திருப்பார்கள். அதனால்தான் இன்றைக்கு தி.மு.க. அரசு நிலத்தை வழங்குகிறோம், இழப்பீடு கொடுக்கப்படும் என கூறும் வாக்குறுதிகள் எவற்றையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த தி.மு.க. அரசு பரந்தூர் மக்களுக்கு விவசாயிகளுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றும் என்று அந்த மக்கள் எப்படி நம்புவார்கள்?
அவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை உடனடியாக தி.மு.க. அரசு வழங்க வேண்டும். அவர்களுக்குச் சரியான குடியிருப்பு பகுதிகளை அமைத்துக் கொடுத்துவிட்டு, அவர்களிடம் புது விமான நிலையத்துக்கு நிலங்கள் வழங்க ஒப்புதல் கேளுங்கள்.
2006-ம் ஆண்டு தி.மு.க. கொடுத்த 2 ஏக்கர் நிலம் வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. தி.மு.க.வின் அந்த நிறைவேற்றப்படாத வாக்குறுதியை பரந்தூர் மக்களுக்காவது நிறைவேற்றலாமே?.
தமிழகத்தில் குறைந்து வரும் முதலீடுகளைக் கண்ட பிறகாவது இனியும் அரசியல் லாபத்திற்காக மக்களை திசை திருப்பாமல் தமிழகத்தின் உண்மையான வளர்ச்சிக்காக தி.மு.க. பாடுபட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.