அரசு நூலகத்துக்கு தீ வைத்த சமூக விரோதிகள்
- சூரப்பள்ளம் ஊர்ப்புற நூலகத்தில் பல்வேறு மாத இதழ்கள், நாளிதழ்கள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருந்துள்ளன.
- தீயில் எரிந்த நூல்களின் மொத்த மதிப்பு 5000 ரூபாயை தாண்டும் என்று கூறுகின்றனர்.
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டையை அருகே உள்ள சூரப்பள்ளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள, ஊர்ப்புற நூலகம் என்ற பெயரில் அரசுக்கு சொந்தமான நூலகம் உள்ளது. அதன் பொறுப்பாளராக மூன்றாம் நிலை நூலகர் ஜெயந்தி (வயது 43) பணியாற்றுகிறார்.
இந்த சூரப்பள்ளம் ஊர்ப்புற நூலகத்தில் பல்வேறு மாத இதழ்கள், நாளிதழ்கள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருந்துள்ளன. இந்நிலையில் கடந்த 8-ந்தேதி நூலகத்தை மூடிவிட்டு நூலக ஊழியர்கள் சென்று விட்டனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது விஷமிகள் யாரோ வேண்டுமென்றே தீயிட்டுக் கொளுத்தியது போல் இருந்தது.
அந்த நூலகத்தில் இருந்த புத்தகங்கள் மற்றும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்த நிலையில் கருகிக் கிடந்ததை பார்த்த ஜெயந்தி, ஊர்மக்கள் துணையுடன் தீயை அணைத்தனர். தீயில் எரிந்த நூல்களின் மொத்த மதிப்பு 5000 ரூபாயை தாண்டும் என்று கூறுகின்றனர். அதனைத் தொடர்ந்து நூலகத்தின் பொறுப்பாளர் ஜெயந்தி பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.