உள்ளூர் செய்திகள் (District)

குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் கைது

Published On 2023-05-11 06:35 GMT   |   Update On 2023-05-11 06:35 GMT
  • குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் கைது செய்யபட்டனர்
  • அரியலூர் போலீசார் நடவடிக்கை

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 24). இவரை அண்மையில், செல்போன மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பல தவணைகளாக 46 ஆயிரத்து 250 ரூபாயை இணைய வழியில் பணம் பெற்றுள்ளார்.ஆனால் கூறியபடி கடன் எதுவும் பெற்றுத்தரவில்லை. அதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ்குமார், இதுகுறித்து அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டதில், மோசடியில் ஈடுபட்ட நபர் தில்லியில் இருப்பதும், அந்த நபருக்கு உடந்தையாக சிலர் நாமக்கல் மாவட்டத்தில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.இதையடுத்து, அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வாணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சிவனேசன் மற்றும் சுரேஷ் பாபு, சுதாகர், ரஞ்சித்குமார் ஆகியோர் அடங்கிய சிறப்பு தனிப்படையினர், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள மல்லசமுத்திரத்துக்குச் சென்று, இணைய மோசடியில் ஈடுபட்ட மூர்த்தி மனைவி உஷா (34), ராமன் மகன் மூர்த்தி (39), நல்லமுத்து மகன் செங்கோடன் (58) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை அரியலூர் அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 1 மடிக்கணினி, 4 செல்போன்கள், 13 ஏ.டி.எம் கார்டுகள், 1 வங்கி கணக்குப் புத்தகம், 35 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்களை, அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News