அருங்காட்சியகம் கட்டுவதற்கான இடம் தேர்வு
- கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை சிறப்பிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது
- இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஆனிமேரி தகவல்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாமன்னன் ராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடித்திருவாதிரை விழா மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது.இதில் எம்.எல்.ஏ.க்கள் க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம்), சின்னப்பா (அரியலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா பேசும்போது கூறியதாவது:-கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் திருக்கோயில் உலக புராதான சின்னமாகவும், பராம்பரிய சின்னமாகவும், தொன்மையான கட்டடக் கலையின் உன்னத அடையாளமாக விளங்கி வருவது நமக்கெல்லாம் பெருமையாக உள்ளது.கங்கைகொண்ட சோழன், முடிகொண்ட சோழன், பண்டித சோழன் என பல்வேறு பெயர்களால் மக்களால் அழைக்கப்படுகின்ற மாமன்னர் ராசேந்திர சோழன் உதித்த நாளை நாடே போற்றும் வண்ணம் ஆடித் திருவாதிரை விழாவாக கடந்த ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.ராசராச சோழன் காலத்திலேயே இளைய அரசராக பொறுப்பேற்று பல்வேறு போர்களில் ஈடுபட்டு வெற்றியை கண்டவர் ராசேந்திரசோழன். இவரது வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது அவருடைய ராணுவ கட்டமைப்பாகும். அதற்கு சான்றாக அமைந்தது தான் இந்த கங்கைகொண்ட சோழபுரம்.நாட்டிலேயே கடற்படை வைத்திருந்த ஒரே மன்னர் இவரே ஆவார். அதனால் தான் கடல் கடந்து பல நாடுகளை வென்று சோழ எல்லைகளை விரிவுபடுத்தினார். இவரது ஆட்சிக் காலம் பொற்காலம். இவருடைய சிறப்பான ஆட்சிக் காலத்தில் பெண்கள் சமூக வேலைகளில் முழுமையாக ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். அந்தக் காலத்திலேயே பெண்களை சமமாக கருதும் உயரிய சிந்தனை கொண்டவர் அவர்.எனவே தான் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் திருக்கோவில் உள்ளிடவற்றை சிறப்பிக்கும் வகையில் இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். அதன்படி அருங்காட்சியகத்துக்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றது.
இங்கு அகழாய்வு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அகழாய்வுகளில் பலவிதமான பண்டைய நாகரீகங்களின் தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு அவை காட்சிப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, மாமன்னர் ராசேந்திர சோழனின் சிறப்புகள், வரலாற்றுப் பெருமைகளை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைஞர்களின் தப்பாட்டம், பரத நாட்டியம், கிராமிய நடனம், கட்டைக் கால் ஆட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) பாலமுரளி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கங்கைகொண்ட சோழபுரம் ஊராட்சித் தலைவர் சரஸ்வதி வரவேற்றார். முடிவில் மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் நன்றி தெரிவித்தார்.