உள்ளூர் செய்திகள் (District)

கங்கை கொண்ட சோழபுரத்தில் திருத்தேர் வீதி உலா

Published On 2023-03-06 03:31 GMT   |   Update On 2023-03-06 03:31 GMT
  • பெண்கள் அதிக அளவு கலந்து கொண்டு வடம் பிடித்தனர்
  • இன்று தீர்த்த வாரி நடைபெறுகிறது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. உலக புராதன சின்னமாக விளங்கும் இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி பிரம்மோத்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்காக விழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினசரி சாமிக்கு மகா அபிஷேக ஆராதனையும், யாகசாலை பூஜைகள், சாமி வீதிஉலா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை யாகசாலை பூஜைகள் முடிந்து தேர் வீதி உலா நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சந்திரசேகர சுவாமி, சந்திரமவுலி தாயார், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். வீதி உலாவின்போது ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தேரை வடம் பிடத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன், இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிர்வாக அலுவலர் செந்தமிழ் செல்வி ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். தேர் புறப்பட்டு ராஜவீதி, கணக்க விநாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் இதன் நிலையை அடைந்தது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரியும், கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News