உள்ளூர் செய்திகள் (District)

உலக தாய்மொழி நாள் விழா

Published On 2023-02-20 08:34 GMT   |   Update On 2023-02-20 08:34 GMT
வெளிநாட்டிலுள்ள தமிழ் ஓலைச் சுவடிகளை மீட்க வலியுறுத்தபட்டது

அரியலூர்:

வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் தமிழ் ஓலைச் சுவடிகளை மீட்டு அவைகளை அச்சிட்டு வெளிக்கொணர்ந்தால் தமிழரின் வரலாற்றில் திருப்பு முனை உருவாகும் என்றார் மொழி அறிஞர் ம.சொ.விக்டர்.அரியலூரில் தமிழ் வழிக்கல்வி இயக்ககம் சார்பில் நடைபெற்ற தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்த நாள் மற்றும் உலக தாய்மொழி நாள் விழாவில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது: உ.வே.சா தமிழ்மொழி வரலாற்றில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளார். அவரின் தமிழ் பணிக்கு அரியலூர் மண் பெரும்பங்காற்றியுள்ளது.அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வாழ்ந்த தமிழ் அறிஞர்கள் தான் உவேசா வுக்கு அதரவு அளித்து தமிழ் கற்றுகொடுத்து அவர்களின் தமிழ்ப்பணிக்கு துணை நின்றனர். உவேசா கரங்களுக்கு கிட்டாத கணக்கில் அடங்கா ஓலைச் சுவடிகள் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் பாதுக்காக்கபடுகிறது. அவை அனைத்தையும் மீட்டு வந்து நாம் அச்சிட்டு வெளிக்கொணர்ந்தால் உலகில் தமிழரின் வரலாற்றில் புதிய திருப்புமுனை உருவாகும் என்றார்.இந்நிகழ்ச்சிக்கு தமிழ்க்களம் நிறுவனர் புலவர் அரங்கநாடன் தலைமை வகித்தார். ஓவியர் முத்துகுமரன், தமிழ்ச்சித்தர் துரைவேலூசாமி, கவிஞர் அறிவு மழை, ஓவியர் அன்புச்சித்திரன், வள்ளலார் கல்வி நிலைய தலைமை ஆசிரியர் சௌந்தர்ராஜன், தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவி காந்திமதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக தமிழக் களம் இளவரசன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் பாண்டியன் நன்றி தெரிவித்தார். இவ்விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News