திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் பேச்சு
- கோவிலில் ரூ. 300 கோடி செலவில் பக்தர்களுக்கான மெகா திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
- பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திடவும் கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் சுமார் ரூ. 300 கோடி செலவில் பக்தர்களுக்கான மெகா திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
அடிப்படை வசதிகள்
இந்நிலையில் தற்போது பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், மேலும் கந்தசஷ்டி விழாவில் கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திடவும் கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து நேற்று கோவில் பணியாளர்களிடம் கருத்துக் கேட்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. கோவில் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு அறங்காவலர் குழு தலைவர் இரா. அருள்முருகன் தலைமை தாங்கினார். இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அன்புமணி, அலுவலக கண்காணிப்பாளர் சீதாலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுவாமி தரிசனம்
கூட்டத்தில் பங்கேற்ற கோவில் பணியாளர்கள், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதியை மேம்படுத்துவது குறித்தும், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்வதை குறைப்பதற்காக வரிசைப்பாதையில் மாற்றம் செய்திட வேண்டும் எனவும் கூறினர்.
பின்னர் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் கூறுகையில், முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.