உள்ளூர் செய்திகள் (District)

கும்மிடிப்பூண்டி அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதல்- 2 பேர் பலி

Published On 2023-02-22 10:05 GMT   |   Update On 2023-02-22 10:05 GMT
  • எளாவூர் பஜார் பகுதியில் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது ஷேர் ஆட்டோ சென்று கொண்டு இருந்தது.
  • விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த தேவராஜ் என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

கும்மிடிப்பூண்டி அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதல்- 2 பேர் பலி

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆரம்பாக்கம் நோக்கி இன்று அதிகாலை ஷேர் ஆட்டோ ஒன்று சென்றது. ஆட்டோவை ஆந்திர மாநிலம் ராமாபுரத்தை சேர்ந்த டிரைவர் ரத்தினம் என்பவர் ஓட்டினார்.

இதில் பெத்திக்குப்பத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தேவராஜ் (வயது 55), சின்ன ஓபுளாபுரத்தை சேர்ந்த திவாகர் வாசு (45), உள்ளிட்ட 5 பேர் பயணம் செய்தனர்.

எளாவூர் பஜார் பகுதியில் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மேம்பா லத்தின் மீது ஷேர் ஆட்டோ சென்று கொண்டு இருந்தது.

அப்போது பின்னால் மரப்பலகைகள் ஏற்றி வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற ஷேர் ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறிய ஷேர் ஆட்டோ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பக்கவாட்டுச் சுவரின் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த தேவராஜ் என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதேபோல் திவாகர் வாசு என்பவர் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தபோது லாரியின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

மேலும் ஆட்டோ டிரைவர் ரத்தினம் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் பலத்த காயம் அடைந்த ரத்தினம், சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்ததும் ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் பூமி என்பவர் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்த விபத்து காரணமாக அப்பகுதி கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி அருகே கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் மீது போதிய மின்விளக்குகள் இல்லாமல் இருப்பதாகவும், இதனால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Tags:    

Similar News