உள்ளூர் செய்திகள் (District)

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை

Published On 2023-11-09 09:50 GMT   |   Update On 2023-11-09 09:50 GMT
  • ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
  • நீர் வரத்து 11 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிற நிலையில், தமிழக காவிரி கரையோர எல்லை பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகின்றன. இதனால் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வ–ரத்தானது படிப்படியாக அதிகரித்து நேற்று வினாடிக்கு காலை 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென அதிகரித்த இந்த நீர்வரத்தானது மேலும் படிப்படியாக அதிகரித்து மாலை நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. வனப்பகுதியிலும் காவிரி கரையோரங்களிலும் மழை யின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது அதனைத் தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி 11 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிய தொடங்கியுள்ளது. இந்த நீர்வரத்தால் ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 8ஆயிரம் கன அடிக்கு கூடுதலாக தண்ணீர் வரத்து இருந்தால் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க தடை விதிப்பது வழக்கம். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு சுமார் 11 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக தருமபுரி மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருதி பரிசல் இயக்குவதற்கு தடை விதித்துள்ளது. அருவிகள் மற்றும் பாதுகாப்பான காவிரி ஆற்றுப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தமிழக மற்றும் கர்நாடக எல்லைகளில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் எனக்கு மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தீபாவளி தொடர் விடுமுறையை யொட்டி ஒகேனக்கலுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News