உள்ளூர் செய்திகள்

கோவையில் பாரதியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகள் திடீர் போராட்டம்

Published On 2023-02-22 09:38 GMT   |   Update On 2023-02-22 09:38 GMT
  • ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இளநிலை, முதுநிலை மற்றும் பட்டப்படிப்பு படித்து வருகிறார்கள்.
  • 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை கையில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடவள்ளி,

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இளநிலை, முதுநிலை மற்றும் பட்டப்படிப்பு படித்து வருகிறார்கள். இதில் சிலர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர்.

குறிப்பாக பெண்கள் தங்கி பயில கண்ணம்மா, பெரியார், வாசுகி என 3 விடுதிகள் உள்ளன. 3 விடுதிகளிலும் மொத்தம் 1,500 பேர் உள்ளனர்.

முன்பு 3 விடுதிக்கும் தனித்தனியாக சமையல் செய்து கொடுத்து வந்தனர். கடந்த ஒரு வருடமாக 3 விடுதிக்கும் ஒரு இடத்தில் சமையல் செய்து கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு கையில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவிகள் கூறும், போது விடுதியில் வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை. இதுகுறித்து புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கழிப்பிடமும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. தண்ணீர் வினியோகமும் செய்யப்படுவதில்லை என்றனர்.

மாணவிகள் போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் வடவள்ளி போலீசார் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உங்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார். இதையடுத்து மாணவிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News