கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய நடந்த சோதனையில் 1777 பேர் மீது வழக்கு: போலீசார் அதிரடி
- குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக தங்கி உள்ளார்களா? என்பதை போலீசார் ஆய்வு செய்தனர்.
- இந்த தீவிர சோதனை ஏதுவாக அமைந்துள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் குற்றச்செயல் மற்றும் வாகன விதிமீறல்களை தடுக்க வேண்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர், பண்ருட்டி, விருத்தாச்சலம், நெய்வேலி, சேத்தியாதோப்பு, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 7 உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று 18-ந்தேதி முதல் வருகிற 23-ந்தேதி வரை தீவிர வாகன சோதனை, குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிப்பு, சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை, தலைமறைவு குற்றவாளிகள், ரவுடிகளை கண்காணிப்பது போன்ற பணிகளில் போலீசார் தீவிர ஈடுபட வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று மாலையிலிருந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதில் கடலூர் மாவட்டம் முழுவதுமுள்ள 89 லாட்ஜ்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள், வேறு மாவட்டங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக தங்கி உள்ளார்களா? என்பதை போலீசார் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் விடிய விடிய தீவிரமாக 2100 வாகனகளில் சோதனை செய்தனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுதல், அதிக பாரங்கள் ஏற்றி செல்லுதல், செல்போனில் பேசி செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 1777 வழக்கு பதிவு செய்து அபராத தொகை வசூல் செய்தனர்.
இது மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடும் 260 பழைய குற்றவாளிகள், 196 ரவுடிகளை அதிரடியாக நேரில் சென்று அவர்கள் சொந்த ஊரில் உள்ளனரா? வீட்டில் உள்ளார்களா? தற்போது வெளியூரில் இருந்தால் என்ன வேலை செய்கிறார்கள்? தற்போது என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்? என்பதனை அதிரடியாக சோதனை செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த 4 குற்றவாளிகளையும், 2 ரவுடிகளையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 32 நபர்கள் மீது சந்தேக வழக்கு பதிவு செய்து அவர்களின் கைரேகை, முழு விலாசம், தற்போது காரணம் இன்றி வெளியில் சுற்றுதல்? உள்ளிட்டவைகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுவை மாநிலத்தில் இருந்து சாராயம் மற்றும் மது கடத்தல் தொடர்பாக 26 வழக்கில் செய்து 27 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் குற்ற சம்பவங்கள், வாகன விதிமீறல்களை தடுப்பது, அடிக்கடி வாகன விபத்தால் ஏற்படும் இறப்பு சதவீதத்தை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்த தீவிர சோதனை ஏதுவாக அமைந்துள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.