உள்ளூர் செய்திகள்

பரதநாட்டியம் ஆடி நிதி திரட்டிய சென்னை மாணவி: பினராய் விஜயனிடம் நேரில் வழங்கினார்

Published On 2024-08-09 06:57 GMT   |   Update On 2024-08-09 06:57 GMT
  • சிறுவர்-சிறுமிகள் சேமிப்பு பணத்தை நிவாரண நிதியாக வழங்கினர்.
  • நிவாரண நிதி திரட்டுவதற்காக பரதநாட்டியம் ஆடிய சிறுமி.

திருவனந்தபுரம்:

வயநாடு நிலச்சரிவு 400-க்கும் மேற்பட்ட வர்களை பலி வாங்கியிருப்பது மட்டுமின்றி, அங்கு பெருத்த சேதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்கள் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்துபோகின. அங்கிருந்த வீடுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்து விட்டன.

சேத மதிப்பு பல ஆயிரம் கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு உதவும் வகையில் பொது மக்கள் நிவாரண நிதி வழங்குமாறு முதல்-மந்திரி பினராய் விஜயன் கேட்டுக்கொண்டார்.

அதனடிப்படையில் பல முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், அரசியல்கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகைகள் என பல்வேறு தரப்பினரும் முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் பள்ளி படிக்கும் சிறுவர்-சிறுமிகள் பலர் தாங்கள் சேமித்துவரும் உண்டியல் பணத்தைக்கூட நிவாரண நிதியாக வழங்கி வருகிறார்கள்.

குழந்தைகளின் இந்த செயல் அனைவரும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. சென்னையை சேர்ந்த ஒரு சிறுமி, நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டு வதற்காக 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடியிருக்கிறார். சென்னையை சேர்ந்த 13 வயது சிறுமி ஹரிணிஸ்ரீ. பள்ளி மாணவியான அவர் பரதநாட்டியம் படித்து வருகிறார்.

அந்த சிறுமி தான், வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடியிருக்கிறார். அந்த நிகழச்சியின் மூலம் கிடைத்த பணம் மற்றும் தனது சேமிப்பு பணம் ரூ.15 ஆயிரத்தை கேரள முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறார். அந்த பணத்தை சிறுமி ஹரிணிஸ்ரீ, கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனிடம் நேரில் வழங்கினார்.

நிவாரண நிதி திரட்டுவதற்காக பரதநாட்டியம் ஆடிய சிறுமி ஹரிணிஸ்ரீயை முதல்-மந்திரி பினராய் விஜயன் பாராட்டினார். இதேபோன்று ஏராளமான சிறுவர்-சிறுமிகள் தங்களின் சேமிப்பு பணத்தை நிவாரண நிதியாக வழங்கினர்.

அவ்வாறு நிதியுதவி வழங்க திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்துக்கு வந்த கேரளாவை சேர்ந்த வைதேகி என்ற பள்ளி மாணவியை, நடிகர் சிரஞ்சீவி அங்கு வைத்தே பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News