வடசென்னையில் விளையாட்டு வளாகம் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- வடசென்னை பகுதியில் நவீன தொழில் நுட்பங்களோடு கூடிய நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
- சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சிறந்த விளையாட்டு வசதிகள், கட்டமைப்புகளுடன் கூடிய ஒரு விளையாட்டு வளாகம் அமைக்க நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் வடசென்னை பகுதியில் நவீன தொழில் நுட்பங்களோடு கூடிய நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். மேலும், அதில் கைப்பந்து, இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கபடி மற்றும் இதர உள்ளரங்க விளையாட்டுகளுக்கான வசதிகளோடு நவீன உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும் எனவும் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, தண்டையார்பேட்டை மண்டலம்-4, வார்டு-41-க்குட்பட்ட சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.9.70 கோடி மதிப்பீட்டில் சிறந்த விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் கூடிய ஒரு விளையாட்டு வளாகம் அமைக்க நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான செலவினம் ரூ.9.70 கோடியை மானியமாக வழங்கியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.