முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நவீன இந்தியாவுக்கான கட்டிடம்: கி.வீரமணி பேச்சு
- அகவை 90-ல் ஆசிரியரின் 80 ஆண்டு பொதுத்தொண்டு' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
- நான் இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்ததற்கு பெரியார் என்ற மாபெரும் தத்துவம்தான் காரணம்.
சென்னை :
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வயதில் 90 ஆண்டையும், பொதுவாழ்க்கையில் 80 ஆண்டையும் கடந்துள்ளார். இதையொட்டி திராவிடர் கழகம் சார்பில் சென்னை தியாகராயநகரில் '90-ல் 80- அவர்தான் வீரமணி' என்ற தலைப்பில் பாராட்டு விழா நேற்று மாலை நடந்தது.
விழாவிற்கு திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பிரசார குழு செயலாளர் அருள் மொழி உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் கி.வீரமணி பேசியதாவது:-
இந்த விழா என் வாழ்நாளில் மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும் நிகழ்ச்சி. இன்னும் அதிகமாக உழை என்பதை நீங்கள் எனக்கு சொல்வதாக எடுத்து கொள்கிறேன். இந்தியாவிலேயே ஒப்பற்ற முதல்-அமைச்சராக திகழும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எனக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். இதனால் என்னை மீறி உணர்ச்சி வசப்பட்டேன்.
இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய தலைவராக அவர் வளர்ந்திருக்கிறார். திராவிட கொள்கையை தமிழகம் மட்டும்தான் ஏற்றுக்கொண்டது என்பதல்ல. பா.ஜ.க.வின் மக்கள் விரோத காவி கொள்கைக்கு மக்கள் மத்தியில் வெறுப்பு அதிகரித்திருக்கிறது.
இன்றைக்கு தமிழகம் கண்ட மாற்றம், வட மாநிலங்களிலும் நிகழும் என்பது நிரூபணமாகி இருக்கிறது. கருணாநிதி இறந்தவுடன் வெற்றிடம் ஏற்பட்டதாக சில வெற்றுவேட்டுகள் சொன்னார்கள். ஆனால் வந்தது வெற்றிடம் அல்ல, புதிய இந்தியாவுக்கான கட்டிடம். ஒரு பெரிய திருப்பம் நிகழ்ந்து வருகிறது. நிச்சயம் அது நல்ல திருப்பமாக இருக்கத்தான் போகிறது.
நான் எந்த பிறந்தநாளிலும் விழாக்களில் பங்கேற்பது இல்லை. ஆனாலும் இந்த விழாவுக்கு நான் ஒப்புக்கொண்டதற்கு காரணம், ஒரு ரகசியத்தை வெளியிட வேண்டும் என்பதுதான். இந்த 90 என்பதே, எனக்கு அந்த 80 மூலமாக கிடைத்ததுதான். அந்த 80 இல்லையென்றால் 90 கிடையாது. இது களத்தில் உள்ள போராளிகள் வரலாறு. எனவேதான் இந்த விழாவுக்கு ஒப்புக்கொண்டேன். இந்த விழாவில் 90 ஆக வந்தாலும், 20 ஆகவே திரும்புவேன்.
அண்ணா பங்கேற்ற கூட்டத்தில் எனது முதல் பேச்சை மனப்பாடம் செய்து படித்தேன். பின்னர் வெளியூர்களுக்கு பேச சென்றேன். அரை டிக்கெட் ஆசாமியாக வளர்ந்தேன். நான் இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்ததற்கு பெரியார் என்ற மாபெரும் தத்துவம்தான் காரணம். அந்த தத்துவமே என்னை ஆளாக்கியது.
பெரியார் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக நாம் இன்னும் உழைக்க வேண்டும். என் வாழ்நாளில் பதவியோ, பொறுப்போ முக்கியமாக நினைத்தது அல்ல. தோழர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும், பாசமும்தான் முக்கியம். அதுவே எல்லாவற்றிலும் மகத்தானது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக விழாவில், 'அகவை 90-ல் ஆசிரியரின் 80 ஆண்டு பொதுத்தொண்டு' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்தி பேசினார்கள்.