உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்துக்கு கை விலங்குடன் வந்து மனு

Published On 2023-09-04 09:21 GMT   |   Update On 2023-09-04 09:21 GMT
  • ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க எதிர்ப்பு
  • முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்யவும் கோரிக்கை

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் ஆகியோர் மனுக்களை அளித்தனர். இதில், இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் சங்கிலியால் கையை கட்டி மனு அளித்தனர்.

மனுவில், அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள 37 பேரை விடுதலை செய்ய கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனர்.

தி.மு.க. காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி அருகே உள்ள சமயபுரத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முறைகேடாக 132 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கினர். எனவே, முறைகேடாக தகுதி இல்லாத நபர்களுக்கு வழங்கிய பட்டாவை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

பொள்ளாச்சி 8-வது வார்டு கோட்டாம் பட்டி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 30 குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். மனுவில், நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக இந்த பகுதியில் குடியிருந்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரியில் படித்து வருகின்றனர். எனவே, நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு எங்களுக்கு பட்டா பெற்று தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News