உள்ளூர் செய்திகள்
கீழப்பாவூர் அருகே குடிநீர் இணைப்புக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார்
- கூடுதலாக ரூ.3,500 வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
- தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இடையர்தவணை ஊராட்சி. இதன் தலைவராக லட்சுமி என்பவர் உள்ளார். இங்கு வீடுகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு அரசு சார்பில் ரூ.1000 என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் கூடுதலாக ரூ.3,500 வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறி, ஊராட்சி மன்ற அலுவலகத்தின் வாயிலில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அறிவிப்பு பேனர் ஒன்று கட்டப்பட்டு உள்ளது. அங்கு தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.