உள்ளூர் செய்திகள்

கேரள அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Published On 2024-05-30 08:40 GMT   |   Update On 2024-05-30 09:05 GMT
  • கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது.
  • கல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலூர்:

தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லை பெரியாறு அணை தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக உள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த முல்லை பெரியாறு அணை குறித்து கேரள அரசு பொய்பிரசாரம் செய்து வருகிறது.

இந்த நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு தீவிர முயற்சி எடுத்துள்ளது. அதற்கு அனுமதி பெறுவதற்காக அம்மாநில அரசு மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்திருந்தது.

கேரள அரசின் இந்த செயலை தமிழக அரசு மற்றும் முக்கிய அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது.

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெரியாறு பாசன கால்வாய் மூலம் சுமார் 1 அரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடைந்து வருகின்றன. இதற்கிடையில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து இன்று மேலூர் பஸ் நிலையம் அருகில் முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் முருகன் கேரள அரசை கண்டித்தும், மத்திய அரசு புதிய அணைக்கான விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலூர், வெள்ளலூர், திருவாதவூர், சூரக்குண்டு, கல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News