கோவை புதிய பஸ் நிலையத்தில் குவிந்த சுற்றுலாபயணிகள் கூட்டம்
- கோடைவிழா கடந்த 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
- பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
கோவை,
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.
அப்படி சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடைவிழா கடந்த 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடைவிழாவின் முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. மலர் கண்காட்சி தொடங்கியதையொட்டி கண்காட்சியை கண்டு களிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களாக கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால் ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுமே எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்படுகிறது.
நீலகிரிக்கு சுற்றுலா வரும் அனைவரும் மேட்டுப்பாளையம் வழியாக தான் செல்ல வேண்டும். இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மற்றும் கோத்தகிரி செல்லும் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.
கோவையில் இருந்து ஊட்டி, குன்னூர், கோத்தகிரிக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோடைகாலம் என்பதாலும், கண்காட்சி நடந்து வருவதாலும் இந்த பஸ்களில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இன்று காலை கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் ஊட்டிக்கு செல்வதற்காக அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குவிந்து இருந்தனர்.
அவர்கள் நீலகிரிக்கு செல்லக்கூடிய பஸ்களில் ஒருவருக்கொருவர் முண்டியத்து கொண்டு ஏறி நீலகிரிக்கு பயணித்தனர். இதனால் நீலகிரிக்கு செல்லும் அனைத்து பஸ்களுமே நிரம்பி காணப்பட்டது.