உள்ளூர் செய்திகள்

நிவாரண தொகை உயர்த்தி கேட்டு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் நிவாரண தொகையை உயர்த்தி வழங்ககோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

Published On 2023-02-18 09:46 GMT   |   Update On 2023-02-18 09:46 GMT
  • தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.
  • ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரமாக நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரி போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா்:

தஞ்சாவூா், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த மாத தொடக்கத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

மழை சேத பாதிப்புக்கு அரசு நிவாரணம் அறிவித்தது.

இந்த நிலையில் சம்பா, தாளடி நெல் பயிர்கள் இழப்பீட்டிற்கு முழு காப்பீட்டு திட்ட இழப்பீடு மற்றும் மாநில அரசு நிதியும் சேர்த்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரமாக நிவாரண தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தஞ்சை அருகே உள்ள அம்மாபேட்டை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ராஜாராமன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தின் போது நிவாரண தொகையை உயர்த்தி வழங்ககோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து வேளாண் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

உங்கள் கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு செல்லப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News