உள்ளூர் செய்திகள் (District)

சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

ஒழுங்குமுறை விற்பனை கூடம் திறக்க தாமதம்; சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

Published On 2023-07-09 09:55 GMT   |   Update On 2023-07-09 09:55 GMT
  • அடியக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பருத்தியை எடுத்து வந்து காத்திருக்கின்றனர்.
  • பொருளாதார நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் கோடை சாகுபடியாக இந்த ஆண்டு 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆரம்பம் முதலே மழை காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றத்தின் காரணமாக பருத்தி சாகுபடி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது மீதமுள்ள பருத்தி எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனையடுத்து கொள்முதல் செய்யப்பட்ட பருத்தியை எடுத்துக்கொண்டு திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலத்திற்கு செல்கின்றனர். அங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகை தந்து விவசாயிகளிடமிருந்து பருத்தியை கொள்முதல் செய்கின்றனர்.

இதற்காக பருத்தியை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் நேற்று இரவு முதல் மாங்குடி, மாவூர், கொரடாச்சேரி, கமலாபுரம், அத்திப்புலியூர், அடியக்கமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனத்தின் மூலமாக பருத்தியை எடுத்து வந்து காத்திருக்கின்றனர்.

திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கதவை திறக்காததன் காரணமாக விவசாயிகள் திருவாரூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரிலிருந்து புலிவலம் வாளவாக்கால் ரவுண்டானா வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தங்களது வாகனங்களில் பருத்தியை வைத்து கொண்டு இரவிலிருந்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

இதன் காரணமாக வாகனத்திற்கு இரட்டை வாடகை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு மீண்டும் பொருளாதார நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயிகளை காக்க வைக்காமல் முன்கூட்டியே ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை திறந்து வைத்து பருத்தியை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News