தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை
- தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காவேரி மற்றும் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது.
- கால்நடைகளை காப்பாற்றுவது போன்ற ஒத்திகை பயிற்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
பரமத்தி வேலூர்:
கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காவேரி மற்றும் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது. இதனால் பல்வேறு நீர் நிலைகள், ஆறுகளில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றுவது, கால்நடைகளை காப்பாற்றுவது போன்ற ஒத்திகை பயிற்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே அரசம்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றில் தீயணைப்பு துறையினரின் பேரிடர் மேலாண்மை வெள்ள தடுப்பு மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. ஒத்திகை பயிற்சியின்போது கொல்லிமலை தீயணைப்பு நிலைய அலுவலர் நல்லதுரை தலைமையில் முன்னணி தீயணைப்பு வீரர்கள் கோவிந்தசாமி, பழனிசாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றுக்குள் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்க வேண்டும். வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஆடு ,மாடுகளை எவ்வாறு காப்பாற்ற வேண்டும். தண்ணீரில் சிக்கி தத்தளித்துக் கொண்டு இருப்பவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும். அவ்வாறு தண்ணீரில் எந்தெந்த பொருட்களை பயன்படுத்தி செல்ல வேண்டும் குறித்த பல்வேறு ஒத்திகை பயிற்சியினை பொதுமக்களுக்கு செய்து காட்டினார்கள். பேரிடர் மேலாண்மை வெள்ள தடுப்பு ஒத்திகை பயிற்சி முகாமில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சித்ரா, பரமத்தி வேலூர் தாசில்தார் சிவக்குமார், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் மற்றும் காவல்துறை, வருவாய் துறை, பொதுப்பணித்துறை, ஊரக துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்து வத்துறை, சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.