உள்ளூர் செய்திகள்

குடிநீர் மேல் தொட்டியிலிருந்து விநியோகித்த குடிநீரில் விஷம் கலந்திருப்பதாக புகார் செய்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்திய போது எடுத்தபடம்.

பொதுமக்களுக்கு விநியோகம் செய்த குடிநீரில் விஷம் கலப்பு?

Published On 2022-06-21 11:12 GMT   |   Update On 2022-06-21 11:12 GMT
  • வீரணம்பாளையம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த குடிநீரில் விஷம் கலந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
  • விவசாய பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து வாடையுடன் தண்ணீர் வருவதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி–யடைந்தனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வீரணம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன்னிமார் கோவில் பகுதியில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக அப்பகுதியில் சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

இந்த தொட்டியில் இருந்து 4 பகுதிகளாகப் பிரித்து குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வழக்கம்போல் இன்று காலை வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்ட போது ஒரு சில வீடுகளில் மட்டும் விவசாய பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து வாடையுடன் தண்ணீர் வருவதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அவர் உடனடியாக வீடுகளுக்கு கொடுத்த தண்ணீர் பைப்பை முழுமையாக அடைத்தார்.

இதுகுறித்து பரமத்தி போலீசாருக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய்த் துறையிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர விசாரணையில் நடத்தினர். மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மருந்து கலக்காத நிலையில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் பூச்சி மருந்து கலந்து இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

திட்டமிட்டு செய்யப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் மேல்நிலை தொட்டியில் இருந்த தண்ணீரை முழுமையாக அகற்றியதுடன் தண்ணீர் தொட்டி மற்றும் குடிநீர் குழாய்களை முழுமையாகச் சுத்தம் செய்து பின்னர் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News