உள்ளூர் செய்திகள்

ஜலகண்டாபுரம் அருகே டிரைவர் அடித்து கொலை வீட்டை எழுதி கொடுக்காததால் கொலை செய்த மகன்கள்

Published On 2022-09-21 08:58 GMT   |   Update On 2022-09-21 08:58 GMT
  • அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
  • சீரங்கன் குடியிருந்து வரும் வீட்டை தனது பெயருக்கு எழுதி தரும்படி இளைய மகன் ராஜ்குமார் தகராறு செய்து வந்தார்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த ஆடையூர் கிராமம், குடியானூரை சேர்ந்தவர் டிரைவர் சீரங்கன் (வயது 64), அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சீரங்கம்மாள் . இவர்களுக்கு சரவணன் (35), ராஜ்குமார் (31) என்ற மகன்கள் உள்ளனர்.

2-வது திருமணம்

கருத்து வேறுபாடு காரணமாக சீரங்கம்மாளை விவாகரத்து செய்த சீரங்கன் 2-வதாக ராஜேஷ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஜலகண்டாபுரத்தை அடுத்த சூரப்பள்ளி சோரையான் வளைவு பகுதியில் புதிதாக வீடு கட்டி வசித்து வந்தார்.

இந்தநிலையில் முதல் மனைவியின் மகன்களுக்கு ஆடையூர் பகுதியில் உள்ள 5 ஏக்கர் நிலத்தில் தலா 2 ஏக்கர் பிரித்து தருவதாக தெரிவித்தார். ஆனால் சீரங்கன் குடியிருந்து வரும் வீட்டை தனது பெயருக்கு எழுதி தரும்படி இளைய மகன் ராஜ்குமார் தகராறு செய்து வந்தார்.

இது குறித்து சீரங்கன் பூலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். நேற்று முன்தினம் சரவணன், ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி யமுனாதேவி ஆகியோர் சீரங்கன் வீட்டிற்கு சென்று சொத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த சீரங்கனை மனைவி மற்றும் உறவினர்கள் மீட்டு பெருந்துறையில்உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

சிறையில் அடைப்பு

இது குறித்து விசாரணை நடத்திய ஜலகண்டாபுரம் போலீசார் சீரங்கனின் மூத்த மகன் சரவணனை கைது செய்தனர். பின்னர் கோர்டடில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 2-வது மகன் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி யமுனா தேவி (25) ஆகிய 2 பேரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News