உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இலக்கிய போட்டிகள் நடத்த கல்வித்துறை அறிவுறுத்தல்

Published On 2023-02-11 07:19 GMT   |   Update On 2023-02-11 07:19 GMT
  • கற்போர் மையம் துவக்கப்பட்டு கல்வி கற்றுத்தர தன்னார்வலர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • வட்டார கல்வித்துறை அலுவலர்களுக்கு இயக்ககத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் :

அரசுப்பள்ளிகளில் புத்தக கல்வியோடு சிறந்த பண்புகளையும், சமூக சிந்தனையை மேம்படுத்த, இணை செயல்பாடு வகுப்புகள் நடத்தப்படுகிறது.நடப்பு கல்வியாண்டில் மன்றங்களை மீண்டும் புதுப்பித்து, மாணவர்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.

இதன்படி 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இலக்கிய மன்றம், வானவில் மன்ற செயல்பாடுகளாக வினாடி- வினா போட்டி, இலக்கிய போட்டிகள் நடத்துவதற்கும் சிறார் திரைப்படங்கள் திரையிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறையினர் கூறியதாவது:- இணைசெயல்பாடுகள் தொடர்பான மன்றங்களில் நடத்தப்படும் போட்டிகள் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நிலையில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்கள் அடுத்தடுத்த நிலைக்கு தகுதிபெறுகின்றனர்.

இறுதியில் மாநில அளவிலான கருத்தரங்கிலும் பங்கேற்கும் வாய்ப்பையும் பெறலாம்.வழக்கமாக போட்டிகளில் அடிக்கடி வெற்றி பெறும் மாணவர்கள் மட்டுமே இப்போதும் பங்கேற்கும் வகையில் இல்லாமல் அனைத்து மாணவர்களையும் போட்டிகளில் ஈடுபடுத்தி வெற்றி பெறச்செய்ய வேண்டும்.அந்தந்த பள்ளிகளில் போட்டிகளுக்கான பொறுப்பு ஆசிரியர்களையும், தலைமையாசிரியர்களை தலைமை ஏற்க செய்தும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

பள்ளி அளவில், இலக்கிய மன்றம், வினாடி-வினா, வானவில் மன்ற போட்டிகள் இம்மாத இறுதி வரை நடத்தப்படுகிறது. மார்ச் மாதம் மாவட்ட அளவிலான போட்டிகள் நடக்கிறது என்றனர்.

வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் சார்பில் வாழ்வியல் திறன் சார்ந்த கல்வி வழங்குதல் செயல்பாடுகளை நடத்திட கல்வித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊராட்சி, நகரம் உட்பட அனைத்து பகுதிகளிலும் 15 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர்களின் இடத்துக்கு சென்று அதற்கான ஏற்பாடு செய்யும் திட்டத்துக்கு, புதிய பாரத எழுத்தறிவு எனப்படும் வயது வந்தோருக்கான கல்வியறிவு திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.தற்போது இத்திட்டத்தில் வாழ்வியல் திறன் கல்வி செயல்பாடுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.அந்தந்த பகுதிகளுக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவரை அணுகி கற்போருக்கு உடல்நலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

பெண்கள், குழந்தைகள், முதியோருக்கான சட்டங்கள் குறித்து காவல் துறை, வழக்கறிஞர்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், அஞ்சல் துறை செயல்பாடுகள், சேமிப்பு, வங்கியில் பணம் செலுத்துதல், தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறைகளை அணுகுதல், சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் தொடர்பாக அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் வாயிலாக ஆலோசனைகளை கற்போருக்கு வழங்க வேண்டும்.ஒவ்வொரு பகுதியிலும் திட்டத்தை செயல்படுத்த பொதுவான கற்போர் மையம் துவக்கப்பட்டு கல்வி கற்றுத்தர தன்னார்வலர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாத இறுதிக்குள் வாழ்வியல் திறன் செயல்பாடுகளை நடத்திட அந்தந்த வட்டார கல்வித்துறை அலுவலர்களுக்கு இயக்ககத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News