உள்ளூர் செய்திகள்

சென்னையில் இன்று மின்சார ரெயில்கள் ரத்து: பொதுமக்கள் தவிப்பு

Published On 2024-09-15 07:30 GMT   |   Update On 2024-09-15 07:30 GMT
  • 20 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படவில்லை.
  • பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் போக்குவரத்துக்கு மின்சார ரெயில்களே பெரிதும் கை கொடுத்து வருகின்றன.

இந்த மின்சார ரெயில்கள் பராமரிப்பு பணிகளுக்காக தற்போது அடிக்கடி ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் முகூர்த்த நாளான இன்று சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரையில் மட்டுமே மின்சார ரெயில்கள் பெரிதும் இடைவெளிவிட்டே இயக்கப்பட்டன.

இதனால் குரோம்பேட்டை, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ஆகிய 3 ரெயில் நிலையங்களுக்கும் மின்சார ரெயில் சேவை முற்றிலும் தடைபட்டுள்ளது.

கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரையில் இயக்கப்படும் ரெயில்களும் வழக்கம் போல 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படவில்லை. காலை 8.30 மணியில் இருந்து ஒரு மணிநேர இடைவெளிவிட்டே ரெயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

முகூர்த்த நாளான இன்று பொதுமக்கள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு ரெயில் பயணத்தையே பெரிதும் நம்பியிருந்தனர்.

ஆனால் மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்ததால் திருமண நிகழ்ச்சி களுக்கு சென்றவர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தனர்.

மணிக்கணக்கில் காத்திருந்தே மின்சார ரெயில்களில் பயணம் செய்ய நேரிட்டது. மின்சார ரெயில்கள் ரத்து செய்யப் பட்டதையடுத்து கூடுதல் பஸ் சேவைகளும் இயக்கப்பட்டன.


பஸ்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. மெட்ரோ ரெயில்களிலும் மக்கள் இன்று அதிக அள வில் பயணம் மேற்கொண்ட னர். இதன் காரணமாக மெட்ரோ ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

திருமண வீடுகளுக்கு செல்வதற்காக பட்டுச் சேலை பட்டு வேட்டியுடன் வீட்டில் இருந்து புறப்பட்ட கணவன்-மனைவி பலர் திருமண வீடுகளுக்கு செல்வதற்கு முன்பாகவே சேலைகளும் வேட்டிகளும் நெரிசலில் சிக்கி கசங்கி போயிருந்ததையும் காண முடிந்தது.

இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, "இது போன்ற முகூர்த்த நாட்களை எல்லாம் கணக்கில் கொண்டு இனி வரும் காலங்களில் அதிகாரிகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அதிக அளவில் விடுமுறை நாட்களில் ரெயில்களை பயன்படுத்துவதாக இருந்தால் அன்றைய தினம் பராமரிப்பு பணிகளை தள்ளி வைத்துவிட்டு வேறு ஒரு நாளில் அந்த பணிகளை செய்ய வேண்டும்" என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Tags:    

Similar News