போக்குவரத்து நெரிசலை தடுக்க திருவான்மியூர்-உத்தண்டி இடையே உயர்மட்ட சாலை
- 6 வழித்தட சாலைப்பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடியும்.
- அரசு பரிசீலனை செய்து வருகிறது.
சென்னை:
சென்னையின் முக்கிய சாலையாக கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. திருவான்மியூர் முதல் அக்கரை வரை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கியது. இதற்கு ரூ.940 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருவான்மியூர், கொட்டி வாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் நில எடுப்பு பணி 15 பகுதிகளாக பிரிக்கப்பட்டு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
6 வழிச்சாலையாக அகலப்படுத்துவதற்கு கொட்டி வாக்கம் பகுதியில் ரூ.19 கோடியிலும், பால வாக்கம் பகுதியில் ரூ.18 கோடியிலும், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை மற்றும் சோழிங்க நல்லூர் பகுதிகளில் ரூ.135 கோடியிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் 6 வழிச்சாலை பணியை வேகப்படுத்தும் ஆய்வு கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அக்கரை சந்திப்பில் சாலை யோரம் கூடாரம் அமைத்து நடைபெற்றது. அப்போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர் மட்ட சாலை அமைப்பதற்கு கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசு பரிசீலனை செய்து வருகிறது. உயர் மட்ட பாலம் டைடல் பூங்கா சந்திப்பில் தொடங்கி எல்பி சாலை சந்திப்பு, நீலாங்கரை, ஈஞ்சம் பாக்கம், அக்கரை வழியாக உத்தண்டியில் முடியும்.
இப்பகுதி மக்களின் தேவையை கருத்தில் கொண்டு எல்.பி. சாலை சந்திப்பு, திருவான்மியூர் ஆர்.டி.ஓ. அலுவலம், , நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், மற்றும் அக்கரை சந்திப்பில் பாலத்தில் ஏறி, இறங்கி செல்லும் வகையில் வடிவமைப்பு செய்யப்படும்.
இந்த பாலத்தின் மூலம் இப்பகுதியை 20 நிமிடங்களில் கடக்க முடியும். கிழக்குகடற்கரை சாலையில் நடைபெறும் 6 வழித்தட பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடியும்.
நிலஎடுப்பு செய்த இடங்களில் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் முடிந்து உள்ளன. இப்பணிகள் முடிந்த இடங்களிலும் மின்வாரிய உபகரணங்களை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இந்த பணி முடிந்ததும் குடிநீர் குழாய் மற்றும் பாதாள கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிகள் இருபுறமும் நடைபெறும்.
அண்ணாசாலையில் இரும்பு மேம்பாலம் பணிக்கு மண்பரிசோதனை நடக்கிறது. கீழே மெட்ரோ ரெயில் பாதை உள்ளதால் அதற்கு ஏற்ப வடிவமைப்பு செய்து உள்ளோம். அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அண்ணாசாலை மேம்பாலம் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.