தீபாவளிக்கு 100 சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்
- ஈரோடு மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான வெளியூர் மக்கள் வசித்து வருகின்றனர்.
- ஈரோடு மண்டலம் சார்பில் நாளை முதல் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
தீபாவளி பண்டிகை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகையொட்டி வரும் சனி, ஞாயிறு, திங்கட்கிழமை ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான வெளியூர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டலம் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகின்ற 25-ந் தேதி வரை 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 11 அரசு போக்குவரத்து கிளைகளில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், மேட்டூர், நாமக்கல் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும். தீபாவளி பண்டிகையொட்டி கூடுதலாக 50 பஸ்கள் பயணிகளின் கூட்டத்தை பொருத்து இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.