புகையிலை பொருட்கள், கஞ்சா விற்ற 4 பேர் கைது
- பவானிசாகர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.
ஈரோடு:
பவானிசாகர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது பவானிசாகர் அடுத்த பசுவபாளையம் அருகே வெள்ளை நிறப்பை உடன் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (60) என்பதும்,
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ், பான் மசாலா போன்ற பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்றதை அவர் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து அவரிடம் இருந்து 670 கிராம் புகையிலை பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ 2 ஆயிரம் இருக்கும்.
மேலும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது திருக்குமார் என்ற நபர் மூலம் பான் மசாலா, புகையிலை பொருட்கள் வாங்கியதாக கூறினார்.
இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் திருக்குமாரை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதேப்போல் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் சூரம்பட்டி போலீசாரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.