ஹான்ஸ்-புகையிலை பொருட்கள் விற்ற 46 பேர் அதிரடி கைது
- போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் அனுமதியின்றி மது விற்ற 9 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை அடியோடு தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் அதிரடியாக போலீசார் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அந்தியூர்-பர்கூர் ரோட்டில் உள்ள ஒரு கடையில் போலீசார் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருட்கள் 3887 பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடையின் உரிமையாளர் ராஜசேகரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் அப்பகுதியில் இருந்து ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 3887 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைப்போல் பவானி, பெருந்துறை கோபி, சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் போலீசார் கடைகளில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஹான்ஸ் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 4, 840 ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஹான்ஸ் புகையிலை விற்றதாக 46 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் அனுமதியின்றி மது விற்ற 9 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.